Skip to main content

ஆதித்ய ஹ்ருதயம்

அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' தமிழில்!

தினமும் சூரியோதய வேளையில் அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' சொல்வது மிகுந்த நன்மை தரும்.


  • ஆதித்ய ஹ்ருதயம் நலம் மற்றும் சந்தோஷம் தரும் சூரிய பகவானின் பிரார்த்தனை மந்திரமாகும்.
  • ராமர் போர் துறையில் ஆழ்ந்த சிந்தனையில் நின்றபோது   அகத்தியர் இந்த மந்திரத்தைக் கூறினார். இந்த மந்திரத்தின் மகிமையால் இராவணன் தோற்றான்.
  • “ஓ ராம” எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்தால் உங்கள் எதிரிகளை வென்று விடலாம். இன்றைய கால கட்டத்தில் விரோதிகளையும் அவர்களின் சூழ்ச்சிகளையும் வெற்றி பெற இந்த மந்திரத்தை நித்தியம் உச்சரிக்க  வேண்டும்.
  • ஆதித்ய ஹ்ருதயத்தை சூரியனின் பலம் பெற்று இருதயம் உறுதி பெற தினமும் பாராயணம் செய்தால் மிகவும் நன்மைகள் நடக்கும். இதை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
  • சூரியக் கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட இந்த மகத்தான புனித  மந்திரத்தை உச்சரித்தால்  அனைத்து எதிரிகளின் சூழ்ச்சியும்  அழிந்து வெற்றி கிடைக்கும்.நினைத்த காரியம் நடந்து முடியும்
  • பஞ்ச பாண்டவர்களில் மூத்த சகோதரரான தர்ம ராஜா சூரியனை வழிபட்டு அக்ஷய பாத்திரம் பெற்று தனது விருந்தினர்களை மகிழ்வித்தார்.
  • ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்..
  • அதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள்.
  • அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள் தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.
  • தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.
  • கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே!"சப்த' என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய்.
  • சூரியனே! ஆகாயத்திற்கு நீயே நாதன். ராகு என்னும் இருளைப் பிளந்து கொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய். ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனாய் இருக்கிறாய்.
  • கண்கண்ட தெய்வமே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன். தட்சிணாயண காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.
  • வட்ட வடிவத்தை உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயமாகும் போது மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே!
  • மகத்தான ஒளியை உடையவனே! எல்லாப் பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிப்பவனே! நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிறைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதை களைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா. அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற 12 மூர்த்திகளை உள்ளடக்கியவனே! உனக்கு நமஸ்காரம்.
  • உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசம் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குபவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.
  • உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய். மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய். ஜலத்தை வற்றச் செய்கிறாய். உலகையே எரிக்கிறாய். மழை பெய்யச் செய்கிறாய். எல்லா உயிர்களும் அழித்து அடங்கியிருக்கும் போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய்.
  • சர்வாத்மாவே! சர்வேஸ்வரனே! வேதங்களால் கூட உன்னை அறியமுடியாது. ஆதித்யனே! வேத விற்பன்னர்கள் செய்யும்யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்


  • போர்க்களத்தில் போருக்கு முனைப்பாக நிற்கும் இராமனையும் இராவணனையும் கண்டார் அகத்தியர். 
தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:


  • தேவர்கள் எல்லாம் இராம இராவண யுத்தத்தைப் பார்ப்பதற்காகத் திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பல ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களின் நடுவே அகத்தியரும் இருக்கிறார். போருக்கு முனைப்பாக இருக்கும் இராம இராவணர்களைப் பார்த்த பின்னர் அகத்தியர் இராமனை நெருங்கி வந்து பின்வருமாறு பேசத்தொடங்கினார்.


ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு


  • தோள் வலிமையில் சிறந்த இராமா! குழந்தாய்! என்றும் அழிவில்லாத எந்த இரகசியத்தால் மக்கள் போர்க்களங்களில் வெல்கிறார்களோ அந்த மறைபொருளை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். கேள்.


ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்


  • புண்ணியத்தைத் தருவதும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடிப்பதும் வெற்றியைத் தருவதும் நாள்தோறும் பன்னிப் போற்றத் தகுந்ததும் அழிவற்றதும் பெருமை கொண்டதும் மங்களம் தருவதுமான அந்த இரகசியத்திற்குப் பெயர் ஆதித்ய ஹ்ருதயம்


ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்


  • இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது.


ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்


  • ரஸ்மிமந்தம் - இதமான பொன்னிறக் கதிர்களை உடையவன். ரஸ்மி என்றால் பொன்னிறக் கதிர்கள். ரஸ்மிமந்தம் என்றால் பொன்னிறக் கதிர்களை உடையவன்.
  • ஸமுத்யந்தம் - தினந்தோறும் தவறாமல் உதிப்பவன்; எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்.
  • தேவாசுர நமஸ்க்ருதம் - தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுபவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருவதால் தேவர்களும் அசுரர்களும் இவனை வணங்குகிறார்கள். (தேவர்களும் அசுரர்களும் இரு வேறு இனத்தவர்கள் என்றொரு கருத்தாக்கம் இப்போது வழங்கி வருகிறது. அந்தக் கருத்தாக்கம் உண்மையெனில் இந்த சொற்றொடர் இரு இனத்தவர்களும் சூரியனை வணங்கிவந்தார்கள் என்பதைச் சுட்டுகிறது. உலகில் எல்லா இனங்களும் பகலவனைப் போற்றியிருக்கிறார்கள் என்பது இப்போது தெரிவதும் அந்த எண்ணத்திற்குத் துணை செய்கிறது).
  • பூஜயஸ்வ - வணங்கத் தகுந்தவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்; கடமைக்கு ஒரு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பவன். அதனால் எல்லோராலும் வணங்கப்படுபவன்; அப்படி வணங்கத் தகுந்தவன்.
  • விவஸ்வந்தம் - தன்னுடைய ஒளியால் சூரிய மண்டலத்தை வலம் வருபவன். பகலவனின் ஒளி வெகு தூரம் பாய்கிறது. அங்கெல்லாம் அவன் வலம் வருகிறான். அதனால் அவனுக்கு விவஸ்வான் என்று பெயர்.
  • பாஸ்கரம் - ஒளியை உண்டு பண்ணுபவன். உலகத்தில் தோன்றும் எல்லா சோதிகளும் இவனை அடிப்படையாகக் கொண்டவையே. பகலவனாகத் தானே ஒளிர்கிறான்; சந்திரனுக்குத் தன் ஒளியைத் தந்து ஒளிர வைக்கிறான். இவன் ஒளியால் தோன்றிய பொருட்களில் தீயை உண்டு பண்ணி தீயை ஒளிர வைக்கிறான்.அதனால் இவனே எல்லா ஒளிகளையும் உண்டுபண்ணுபவன். பாஸ்கரன்.
  • புவனேஸ்வரம் - இப்படி எல்லா இயக்கங்களுக்கும் காரணமாக இருப்பதால் இவனே உலகங்களுக்கெல்லாம் தலைவன்.


சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

  • ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச - இவனே எல்லா தேவர்களாகவும் இருக்கிறான். ஸர்வ தேவ ஆத்மக: என்றால் 'எல்லா தேவர்களின் உருவமாக' என்று பொருள். ஹி என்றால் 'உறுதியாக இருக்கிறான்' என்று பொருள். ஏச என்றால் இவன்; இந்த புருஷன் என்று பொருள்.
  • தேஜஸ்வீ - ஒளிமயமானவன்; வீரன்.
  • ரஸ்மிபாவன: - தன்னுடைய இதமானப் பொன்னிறக் கதிர்களால் எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.
  • ஏச - இவனே
  • தேவாசுர கணான் - தேவர்களின் கூட்டத்தையும் அசுரர்களின் கூட்டத்தையும்
  • லோகான் - எல்லா உலகங்களையும்
  • பாதி கபஸ்திபி: - தன்னுடைய கதிர்களால் பாதுகாக்கிறான்.
ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:


  • ஏச - இவனே
  • ப்ரஹ்மா ச - படைக்கும் கடவுளாகிய பிரம்மனும், பெரிதிலும் பெரிதானவனும் (ப்ரஹம என்றால் பெரியது என்று பொருள்)
  • விஷ்ணுச்ச - காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும், எங்கும் நிறைந்திருப்பவனும் (விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது என்று பொருள்)
  • சிவ: - அழிக்கும் கடவுளாகிய சிவனும், மங்கல உருவானவனும் (சிவ என்றால் மங்கலம் என்று பொருள்)
  • ஸ்கந்த: - தேவ சேனையின் தலைவனான முருகனும், அனைத்தையும் இணைப்பவனும் (ஸ்கந்த என்றால் இணைப்பு என்று ஒரு பொருள்), அன்பிற்கும் அறிவிற்கும் அனைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும் (ஸ்கந்த என்றால் ஊறவைப்பவன் என்றும் ஒரு பொருள்)
  • ப்ரஜாபதி: - மக்களின் தலைவனும்
  • மஹேந்த்ரோ - தலைவர்களுக்கெல்லாம் தலைவனான தேவேந்திரனும்
  • தனத: - செல்வத்தை அருளும் குபேரனும்
  • காலோ - காலமும்
  • யம: - யமனும், தண்டித்து நல்வழிப்படுத்துபவனும் (யம என்றால் தண்டிப்பவன், நல்வழிப்படுத்துபவன் என்று பொருள்)
  • ஸோமோ - சந்திரனும்
  • ஹி - உறுதியாக
  • அபாம்பதி: - நீரின் தலைவனான வருணனும்

முதலில் மும்மூர்த்திகளாக இருப்பவன் சூரியன் என்று சொல்லிவிட்டு பின்னர் மற்ற தெய்வங்களை எல்லாம் சொல்லி வருகிறார். மும்மூர்த்திகளுக்கு அடுத்து முருகனை முதலில் சொன்னதைப் பார்த்தால் வைதீக தெய்வங்களில் முருகனின் முதன்மை தெரியும். அகத்தியர் தன் குருவான முருகனை முதலில் சொன்னார் என்றாலும் சரியே.

பிரஜாபதி என்று பிரம்ம தேவரைத் தான் சொல்வார்கள். மும்மூர்த்திகளைச் சொல்லும் போதே பிரம்ம தேவரைச் சொல்லிவிட்டார் ஆகையால் மீண்டும் ப்ரஜாபதி என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. கணபதியை ப்ரம்மணஸ்பதி என்று தொடக்கக் கால மந்திரங்கள் சொல்வதால் இங்கே கணபதியைக் குறிக்கிறாரோ என்ற எண்ணம் உண்டு. ஸ்கந்தனைச் சொன்னவுடனே ப்ரஜாபதியைச் சொன்னதால் அது ப்ரம்மணஸ்பதியாகிய கணபதியாக இருக்கவும் வாய்ப்புண்டு.  அதற்கடுத்து முறையே தேவர்களில் முதன்மையானவர்களான இந்திரன், குபேரன், காலன், யமன், யமன், ஸோமன், வருணன் ஆகியோர் கூறப்படுகிறார்கள்.


பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :

  • பிதரோ - பித்ரு தேவதைகளும், முன்னோர்களும்
  • வஸவ: - உலகத்தின் எல்லா இயற்கை செல்வங்களும் ஆன எட்டு வசுக்களும் (அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா என்ற இவர்களே எட்டு வசுக்கள்)
  • சாத்யா - என்றுமே கருமவசப்படாத நித்யர்களும் (அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்)
  • ஹி - உறுதியாக
  • அஸ்வினௌ - தேவ மருத்துவர்களான அஸ்வினி தேவர்களும்
  • மருதோ - காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்
  • மநு: - வைவஸ்வத மனுவும்
  • வாயு: - காற்று தேவனும்
  • அஹ்னி: - தீக்கடவுளும்
  • ப்ரஜா ப்ராண: - மக்களின் உயிர்க்காற்றும்
  • ருது கர்தா - பருவங்களை உண்டாக்குபவனும்
  • ப்ரபாகர: - ஒளியை உண்டாக்குபவனும், புகழைத்தருபவனும்

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:

  • ஆதித்ய: - அதிதியின் மகனும்
  • ஸவிதா - அறிவானவனும், அனைவருக்கும் தந்தையும்
  • ஸூர்ய: - புலன்களைச் செயலாற்றத் தூண்டுபவனும்
  • கக: - வானவெளியில் நடமாடுபவனும்
  • பூஷா - அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
  • கபஸ்திமான் - ஒளிச்சுடர்களை உடையவனும்
  • ஸ்வர்ண சத்ருசோ - பொன்னிறத்தை உடையவனும்
  • பானு: - வட்டவடிவமானவனும்
  • ஹிரண்யரேதோ - அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
  • திவாகர: - பகலொளியை உண்டாக்குபனும்
  • இவனே உறுதியாக பிரம்மனும், விஷ்ணுவும், சிவனும், ஸ்கந்தனும், பிரஜாபதியும், இந்திரனும், குபேரனும், காலமும், யமனும், ஸோமனும், வருணனும், பித்ரு தேவர்களும், வசுக்களும், சாத்யர்களும், அஸ்வினி தேவர்களும், மருத் தேவர்களும், மனுவும், வாயுவும், அக்னியும், பிராணனும் ஆக இருக்கிறான். இவனே பருவங்களையும், பகலொளியையும் உண்டாக்குபவன். இவன் பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, சூரியன், ககன், பூஷா, கபஸ்திமான், பானு என்று பலவாறானவை.

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

  • ஹரித் அஸ்வ: - பச்சைக்குதிரையை உடையவன். உலகெங்கும் பசுமை நிறம் செழிக்க சூரியனின் கதிர்கள் தேவை. அந்த பச்சைப்பயிர்களை வளர்ப்பவன் ஆதலால் அவன் பச்சைக்குதிரையை உடையவன் ஆகிறான்.
  • சஹஸ்ரார்ச்சி: - ஆயிரக்கணக்கான கதிர்களை உடையவன். தன்னுடைய ஆயிரக்கணக்கான கதிர்களால் இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்.
  • சப்த சப்தி: - ஏழு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன். இவனின் கதிர்கள் எல்லா வகையான நிறங்களும் உடையவை. அனைத்து நிறங்களும் சேர்ந்த இவன் கதிரே இவன் தேர். ஆனாலும் அந்த எல்லா நிறங்களிலும் ஏழு நிறங்கள் மட்டுமே வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த நிறங்களை வானவில்லில் காணலாம். அந்த ஏழு நிறங்களும் இங்கே ஏழு குதிரைகளாகச் சொல்லப்படுகின்றன.
  • ஒரு வாரம் என்பதை ஒரு தேர் என்று கொண்டால் அந்த வாரத்தின் நாட்களைக் குதிரைகளாகக் கொள்ளலாம். அப்படி ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தை ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு தேராக உடையவன் கதிரவன்.
  • மரீசிமான் - தன்னுடைய கதிர்களால் உலகனைத்தையும் நடத்துபவன். உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.
  • திமிரோன் மதன: - இருட்டையும் அறியாமையையும் அழிப்பவன். இவனது கதிர்கள் இருக்கும் இடத்தில் இருட்டு இருப்பதில்லை. இருட்டில் இருக்கும் வரை தன்னுடைய உடலே தெரியாமல் இருக்கின்றது; இவனது கதிர்கள் வந்தவுடன் அனைத்து இயக்கங்களும் நடைபெற்று உலக அறிவு, ஆன்மிக அறிவு என்ற எல்லா அறிவும் கிட்டும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அதனால் இவன் அறியாமை இருளையும் நீக்குபவன் ஆகிறான்.
  • சம்பு: - மகிழ்ச்சியைத் தருபவன். அறியாமை என்னும் இருளை நீக்குவதால் உயிர்கள் அறிவு பெறுகின்றன. அந்த அறிவால் நன்மையும் மகிழ்ச்சியும் அடைகின்றன.
  • த்வஸ்டா - அனைத்தையும் குறைப்பவன். எந்தப் பொருளும் இவனது கதிர்களில் நீண்ட நாட்கள் இருந்தால் தன்னுடைய உருவத்திலிருந்து சுருக்கமடைகின்றது. குறிப்பாக நீர். அனைத்தையும் குறைப்பதால் உலக சுழற்சிக்கு வழி வகுக்கிறார் சூரியன். நீரைக் குறைப்பதால் மேகங்களை உருவாக்குகிறான்; மழையாகப் பொழிய வைக்கிறான். அதே போல் இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
  • மார்தாண்ட - மிகுந்த வலிமை உடையவன். இவனிடமிருந்தே உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் வலிமையைப் பெறுகின்றன. அனைத்துப் பொருட்களுக்கும் வலிமையைத் தரும் இவன் எல்லாவற்றையும் விட வலிமை மிகுந்தவன்.
  • அம்சுமான் - எங்கும் பரவும் கதிர்களை உடையவன். மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும் தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.
ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:

  • ஹிரண்யகர்ப்ப: - பொன்மயமான கருப்பையை உடையவன். உலகங்களின் தோற்றத்திற்குக் காரணமானவன் என்பதால் இவன் பொன்மயமான கருப்பையை உடையவன் எனப்படுகிறான். உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
  • சிசிர: - குளிரைத் தருபவன். இவனுடைய கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை. அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.
  • தபனோ - நடுக்கத்தைத் தருபவன். இவன் தரும் குளிரால் உடல் நடுக்கம் தருபவன். இவனுடைய பெருமையைக் கண்டு உடலும் மனமும் நடுங்கச் செய்பவன்.
  • பாஸ்கர: - எல்லாவற்றையும் ஒளிவீசச் செய்பவன். இவனுடைய ஒளி பெற்று எல்லா உலகங்களும் அவற்றில் இருக்கும் பொருட்களும் ஒளி வீசுகின்றன. சந்திரனும் இவனுடைய ஒளியால் தான் ஒளிர்கிறான். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
  • ரவி: - எல்லாவற்றையும் உருவாக்குபவன். உலகத்தில் எந்தப் பொருள் உருவாக வேண்டுமென்றாலும் இவனது கதிர்களும் அதிலிருந்து கிடைத்த சக்தியும் தேவை.
  • அக்னிகர்ப்ப: - தீயை தன்னுடலாகக் கொண்டவன். அத்தீயிலிருந்தே உயிர்களைப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் செய்யும் கதிர்களை உண்டாக்கி எல்லாத் திசைகளிலும் வீசுபவன்.
  • அதிதேர் புத்ர: - அதிதியின் மகன். தேவமாதாவான அதிதியின் முதன்மையான மக்களில் ஒருவன்.
  • சங்க: - ஆனந்தமயமானவன். இவனது கதிர்களால் உலகங்களுக்கெல்லாம் ஆனந்தத்தைத் தருபவன்.
  • சிசிரநாசன - குளிரை அழிப்பவன். இவனது கதிர்களின் குறைவினால் ஏற்பட்டக் குளிரை இவனது கதிர்களில் பெருக்கத்தால் நீக்குபவன்.

வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:

  • வ்யோமநாத: - வானத்தின் தலைவன். வானவீதியில் சூரிய குடும்பத்தின் தலைவன் இவனே. வானத்தில் கண்களுக்கு நேரடியாகத் தெரியும் பொருட்களில் மிகப்பெரியவன் இவனே.
  • தமோ பேதி - இருளை உடைப்பவன். சூரியனின் கதிர்கள் தோன்றும் வரை இருள் கனத்த இரும்புத் திரையைப் போல் சூழ்ந்திருக்கிறது. இவனது கதிர்கள் வந்தவுடனேயே பெரிய சம்மட்டியால் உடைக்கப்பட்டு சுக்கு நூறாகச் சிதறியதைப் போல் இருள் காணாமல் போகின்றது.
  • ருக் யஜுஸ் சாம பாரக: - ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன். வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள். அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர். இங்கே சூரியன் மூவேதங்களையும் கண்டு வெளிப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.
  • கன விருஷ்டி: - கடும் மழையைப் பெய்விப்பவன். இவனது கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களாலேயே உலகில் மழை பொழிகின்றது. அதனால் இவனே மழையைப் பொழிவிப்பவன் ஆகின்றான்.
  • அபாம் மித்ர: - நீருக்குத் தோழன். சூரியனும் நீரும் தோழர்கள் என்பதாலேயே இவனது கதிர்கள் பட்டவுடன் நீர் தன் உரு மாறி இவனுடன் கலந்து கொள்ளச் செல்கிறது போலும்.
  • விந்த்ய வீதி ப்லவங்கம: - விந்திய மலையை ஒட்டிய வீதியில் விரைவாகச் செல்பவன். சூரியனை பூமி சுற்றும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வானத்தில் அவன் வருடத்தில் ஆறு மாதம் வட பக்கத்திலும் ஆறு மாதம் தென் பக்கத்திலும் செல்வதாகத் தோன்றும். அதனையே உத்தராயணம் என்றும் தட்சினாயணம் என்றும் கூறுவார்கள். அந்த வடக்கு வீதியும் தெற்கு வீதியும் விந்திய மலைத்தொடரை ஒட்டி இருப்பதாகக் கூறுவதும் மரபு. அந்த வகையில் சூரியன் விந்திய மலை வீதியில் விரைவாகச் செல்பவனாகச் சொல்லப்படுகிறான்.

ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

  • ஆதபி: - கொளுத்துபவன். இதற்கு விளக்கம் தேவையில்லை. எல்லோரும் அனுபவித்திருப்போம்.
  • மண்டலி - வட்டவடிவமானவன்.
  • ம்ருத்யு: - மரணவடிவானவன். உலகத்தில் எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும் அனைத்து செயல்களையும் நடத்துவிப்பவன் என்பதால் அவன் மரண வடிவாகவும் இருக்கிறான்.
  • பிங்கல: - மஞ்சள் வண்ணம் கொண்டவன். சூரியனை மரணம் என்று சொன்னவுடன் அவன் மறையும் போது தோன்றும் பொன்வண்ணம் நினைவிற்கு வருகின்றது போலும்.
  • சர்வ தாபன: - அனைத்தையும் தகிப்பவன்.
  • கவி: - அனைத்தையும் அறிந்தவன்.
  • விஷ்வோ - அண்ட வடிவானவன்.
  • மஹாதேஜ: - மிகப்பெரும் ஒளிவடிவானவன்.
  • ரக்த: - சிவந்த வண்ணம் கொண்டவன். பெரும் ஒளிவடிவானவன் என்றவுடன் காலையில் சூரியன் தோன்றும் போது தோன்றும் செவ்வண்ணம் நினைவிற்கு வருகிறது போலும்.
  • சர்வ பவோத்பவ: - எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.


நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே


  • நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிப: - விண்மீன்கள், கிரகங்கள் போன்ற வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் தலைவன்.
  • விஷ்வ பாவன: - அண்டத்தின் பிறப்பிடம்
  • தேஜசாம் அபி தேஜஸ்வி - ஒளிவீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன்
  • த்வாதசாத்மன் - பன்னிரு வடிவங்கள் கொண்டவன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு வடிவம் கதிரவனுக்கு இருப்பதாகக் கூறுவது மரபு. பன்னிரு ஆதித்யர்கள் என்று அவர்களைச் சொல்வார்கள். அவர்கள் இந்திரன், தாதா, பர்ஜன்யன், த்வஸ்டா, பூஷா, அர்யமா, பகன், விவஸ்வந்தன், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன்.
  • நமோஸ்துதே - உனக்கு எங்களின் வணக்கங்கள்


நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:
  • நம: - வணக்கங்கள்.
  • பூர்வாய கிரயே - கிழக்கு மலையில் உதிப்பவருக்கு. இந்த ஸ்தோத்ரம் ராம ராவண யுத்தத்திற்கு முன்னர் உபதேசிக்கப்பட்டதால் இலங்கையில் இந்த ஸ்தோத்ரம் தோன்றியதாகக் கூறலாம். தமிழகத்தில் சூரிய உதயம் கடலில் நடக்கும். இலங்கையில் கிழக்கு திசையில் ஏதேனும் மலை இருக்கிறதா; அந்த மலையைத் தான் இங்கே உதயசூரியனின் மலை என்று சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
  • பஸ்சிமாத்ரயே - மேற்கு திசையில் மறைபவருக்கு
  • ஜ்யோதிர் கணானாம் பதயே - ஒளிக்கூட்டங்களின் தலைவருக்கு
  • தினாதி பதயே - நாளின் தலைவருக்கு
  • நம: - நமஸ்காரங்கள்

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

  • ஜயாய - வெற்றி வடிவானவருக்கு
  • ஜயபத்ராய - வெற்றியெனும் மங்கலத்தைத் தருபவருக்கு
  • ஹர்யஸ்வாய - பச்சை நிறக்குதிரையை உடையவருக்கு
  • நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
  • சஹஸ்ராம்சோ - ஆயிரக்கணக்கான பகுதிகளை/கதிர்களை உடையவருக்கு
  • ஆதித்யாய - அதிதியின் மகனுக்கு
  • நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

  • நம: - வணக்கங்கள்
  • உக்ராய - உக்கிரமானவருக்கு
  • வீராய - வீரம் உடையவருக்கு
  • சாரங்காய - கதிர்கள் என்னும் அம்புகளை ஏவும் வில்லை உடையவருக்கு
  • நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
  • பத்மப்ரபோதாய - தாமரையை மலரச் செய்பவருக்கு; இதயத் தாமரையை மலரச் செய்பவருக்கு; ஞானத்தை வழங்குபவருக்கு
  • மார்தாண்டாய - மிக்க வலிமை பொருந்தியவருக்கு
  • நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.

பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:


  • ப்ரஹ்ம ஈசான அச்யுத ஈசாய - பிரமன், ஈசானன் என்னும் சிவன், அச்சுதன் என்னும் விஷ்ணு என்னும் மூவருக்கும் தலைவராக இருப்பவருக்கு
  • சூர்யாய - சூரியனுக்கு
  • ஆதித்ய வர்சஸே - ஆதித்யன் என்ற பெயர் உடைய ஒளிர்பவருக்கு
  • பாஸ்வதே - மிகுந்த ஒளியை வீசுபவருக்கு
  • சர்வ பக்ஷாய - அனைத்தையும் உண்பவருக்கு; கால உருவானவருக்கு
  • ரௌத்ராய - பயத்தை உண்டாக்குபவருக்கு
  • வபுஷே - ஒளிரும் திருமேனியை உடையவருக்கு; உலகங்களையும் உயிர்களையும் உடலாக உடையவருக்கு
  • நம: - வணக்கங்கள்.

தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

  • தமோக்னாய - இருளை அழிப்பவருக்கு
  • ஹிமக்னாய - குளிரை அழிப்பவருக்கு
  • சத்ருக்னாய - எதிரிகளை அழிப்பவருக்கு
  • அமிதாத்மனே - எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவருக்கு; எல்லா உலகங்களுக்கு உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
  • க்ருதக்னக்னாய - செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
  • தேவாய - ஒளி வீசுபவருக்கு
  • ஜ்யோதிசாம் பதயே - ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு
  • நம: - வணக்கங்கள்.

தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே


  • தப்த சாமீகராபாய - உருக்கிய பொன்னின் நிறத்தைக் கொண்டவருக்கு
  • வஹ்னயே - தீ வடிவானவருக்கு
  • விஸ்வகர்மனே - உலகத்தின் அனைத்து செயல்களையும் செய்பவருக்கு
  • தம அபிநிக்னாய - இருளை அழிப்பவருக்கு
  • ருசயே - உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு
  • லோக சாக்ஷினே - உலகத்தில் சாட்சியாக நிற்பவருக்கு
  • நம: - வணக்கங்கள்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:


  • நாசயதி ஏஷ வை பூதம்: - உயிர்களை எல்லாம் இவனே அழிக்கிறான்
  • தத் ஏவ ஸ்ருஜதி - அவற்றை இவனே பிறப்பிக்கிறான்
  • ப்ரபு: - இறைவன் இவனே
  • பாயதி ஏஷ - இவனே காக்கிறான்
  • தபதி ஏஷ - இவனே வெயிலாகக் காய்கிறான்
  • வர்ஸதி ஏஷ - இவனே மழையாகப் பொழிகிறான்
  • கபஸ்திபி: தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால்
  • இவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் செய்கிறான். இவனே வெயிலாகவும் மழையாகவும் இருக்கிறான்.

ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்


  • ஏஷ - இவனே
  • பூதேஷு - எல்லா உயிர்களிலும்
  • சுப்தேஷு ஜாகர்தி பரிநிஸ்டித: - அவை உறங்கும் போதும் விழிப்பாக நிலை நிற்கிறான். (அவற்றின் உயிராக நிற்கிறான்)
  • ஏஷ ஏவ அக்னி ஹோத்ரம் ச - இவனே தீ வழிபாட்டின் வடிவமாகவும் இருக்கிறான்
  • பலம் ச ஏவ அக்னி ஹோத்ரினாம் - அத்தீவழிபாட்டின் பயனாகவும் இருக்கிறான்


வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:


  • ச ஏவ - இவனே
  • வேதா: - வேதமாகவும்
  • க்ரத: - சடங்குகளாகவும்
  • க்ரதூனாம் பலம் - சடங்குகளின் பயனாகவும்
  • ஏவ ச - இவனே இருக்கிறான்
  • லோகேஷு - இவ்வுலகத்தில்
  • யானி க்ருத்யானி - என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ
  • சர்வ ஏஷ - அவை எல்லாமும் இவனே
  • ரவி: - ஒளி படைத்தவன்
  • ப்ரபு: - இறைவன்; தலைவன்


ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ

  • ராகவ: - இராகவா!
  • ஏனம் - இவன்
  • க்ருச்ரேஷு ஆபத்ஸு - எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும்
  • காந்தாரேஷு - காடுகளிலும்
  • பயேஷு ச - பயமுறுத்தும் நேரங்களிலும்
  • கீர்த்தயேன புருஷ: - இவனைப் பாடி வழிபடுவோரை
  • கச்சின் - எப்போதும்
  • நாவஸீததி - கைவிடமாட்டான்.

பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு


  • தேவதேவம் - தேவர்களுக்கும் தெய்வமானவனை
  • ஜகத்பதிம் - உலகத்தை உடையவனை
  • பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ - ஒரு நிலைப்பட்ட மனத்துடன் வணங்குவாய்.
  • ஏதத் - இந்த ஸ்தோத்திரத்தை
  • த்ரிகுணிதம் ஜப்த்வா - மும்முறை ஜபித்து
  • யுத்தேஷு - போரில்
  • விஜயிஷ்யஸி - வெற்றி பெறுவாய்


அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

  • அஸ்மின் க்ஷணே - இந்த நொடியிலேயே
  • மஹாபாஹோ - பெரும் தோள்வலிமை உடையவனே
  • ராவணம் த்வம் வதிஷ்யஸி - இராவணனை நீ வதைப்பாய்
  • ஏவம் உக்த்வா - இப்படி சொல்லிவிட்டு
  • ததா அகஸ்த்யோ - அங்கிருந்த அகத்தியர்
  • ஜகாம ச யதா கதம் - எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்


ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்

  • ஏதச் ச்ருத்வா - இதனைக் கேட்டு (இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்ரத்தைக் கேட்டு)
  • மஹாதேஜா - பெரும் வலிமையுள்ளவனும்
  • தாரயாமாஸ - நோக்கத்தில் உறுதியுள்ளவனும்
  • சுப்ரீதோ - மிகவும் மகிழ்ந்தவனும்
  • ராகவ: ப்ரயதாத்மவாந் - முயற்சிகளில் சிறந்தவனும் ஆன இராகவன்
  • நஷ்ட சோகோ பவத் ததா - அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்

  • த்ரிர் ஆசம்ய - மும்முறை ஆசமனீயம் செய்து
  • சுசிர்பூத்வா – சுத்தமடைந்த உடலினை அடைந்தான்
  • தநுர் ஆதாய - வில்லை ஏந்தியவன்
  • வீர்யவாந் - வீரத்தில் சிறந்தவன்
  • ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து - ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (இந்த ஸ்தோத்ரத்தை) ஜபித்து
  • பரம் ஹர்சம் அவாப்தவாந் - மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்


ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

  • ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் - போர் செய்யும் நோக்கத்துடன் வரும்
  • ராவணம் ப்ரேக்ஷ்ய - இராவணனைப் பார்த்து
  • ஸர்வ யத்னேன மஹதா - மேலான எல்லா முயற்சிகளுடனும்
  • வதே தஸ்ய த்ருதோபவத் - அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி
  • அத - அப்போது
  • சுரகண மத்யகதோ - தேவர்கள் கூட்டத்தின் நடுவில் இருந்த
  • ரவி - சூரியன்
  • முதிதமநா - மிகவும் மகிழ்ந்த மனத்துடன்
  • பரமம் ப்ரஹ்ருஷ்யமான: - மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக
  • நிசிசரபதி - இரவில் திரிபவர்களான அரக்கர்களின் தலைவனான இராவணனின்
  • சம்க்ஷயம் விதித்வா - அழிவு நேரம் நெருங்கி விட்டதை அறிந்து
  • ரவதந் நிரீக்ஷ்ய ராமம் - 'விரைவில் நடத்துவாய் இராமா'
  • வசஸ்த்வரேதி - என்று சொன்னான்.


References (source for copy!)
http://gajagari.blogspot.com/2016/02/blog-post_96.html

https://www.youtube.com/watch?v=sx-JDtV1b_4

http://sthothramaalaa.blogspot.com/2008/04/1.html

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...