அகத்திய முனிவர் அருளிய ஐயப்ப பஞ்சரத்ன மாலா:
அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்
அசலனாய் அகுண குணணாய்
அமரருக்கு அதிபனாய் அடியவர்க்கு எளியனாய்
ஹரிஹரர் ஒரு மைந்தனாய்
சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார
ஜோதியாய் தோன்றும் உந்தன்
துரிய லீலா வைபவங்கள் பல என்று மறை
சொல்லுகின்றதேதும் அறியேன்
பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
பெருமையை நினைத்து பாடிப்
பிதற்றுகின்றேன் நின் பெரும் கோயில் ஏய்தினேன்
பிழை பொறுத்தருள வருவாய்
தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
தந்த சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அந்தகாரத்திலே அருள் விளக்கு ஏற்றுவாய்
அடவியிலே வழி காட்டுவாய்
அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்
கள்வர் அணுகாது காத்து வருவாய்
வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்
மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்
மரணபயமும் போக்குவாய்
இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்
எண்ணித் துதிக்க வசமோ
ஏறாத மலையேறி எய்தும் மெய்யடியவரை
ஏற்பது உன் பாரமல்லவோ
சந்தண சுகந்த சுந்தர சுதந்திர
சித்த சங்க சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
ஏகாந்த ஜோதிமணியே
எண்ணுவோர் எண்ணியது எல்லாம் தந்து
பேரின்ப மழை பொழியும் முகிலே
நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி
அருள்நிலை சேர்க்க வந்த துணையே
நெடும் பாலை வனவாழ்வில் நின்ற கற்பகமே
நிராலம்பமான மெய்ப்பொருளே
மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை
வாழ்விக்கும் கருணை வடிவே
வர நீல சேல சிங்கார சுகுமார
மதிவதனனே மணிகண்டனே
சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
சரணம் சரணம் அருள்வாய்
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரி மாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நீயலாதென் குறைகள் கேட்பவரும் இல்லை ஒரு
நிழலில்லை என்று மனமோ
நிலையில்லை நினை அடையும் நியமங்கள் இல்லை
நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை
ஆயிரம் பிழைகள் தனது அடியவர் புரிந்தாலும்
ஆதரித்து அருளும் அரசே
அவதார மூர்த்தியே அன்பான தெய்வமே
ஆதி ஐய்யப்ப குருவே
தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
ஈன்றவர் உன்னை
தொட்டனைத் துய்ய நீ யார் போன்று உளாய் என
சொல்லாது மௌனாகி
தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
தந்தை போல் வைத்த மகனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
அருளாளர் வாழ்க வாழ்க
அனுதினமும் நின் கோவில் இலகு திசை
தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க
விரத நியமங்களால் மெய் மறந்து உனது பெயர்
விண்ணதிரவே முழங்கி
வெற்பேறி வளர்படிகள் மேலேறி வருகின்ற
மெய்த் தொண்டர் வாழ்க
தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
திருநாம மகிமை வாழ்க
தேடும் இக்கவி மாலை பாடுவோர் இன்பச்
சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க
சரியை கிரியா யோக ஞான சன்னதி
சரணம் சரணம் சரணம் ஐயா
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
சிவபாலன் ஐயனுக்கும். மோகினி பாலனுக்கும், வில்லாலி வீரனுக்கும், வீரமணிகண்டருக்கும், அச்சன்கோவில் ஆண்டவர்க்கும், ஆரியங்காவு அய்யாவிற்கும், புலிபால் கொணர்ந்தவர்கும், புகழ் குளத்தூர் ஆண்டவர்கும், சண்டபிரசண்டருக்கும், வீரமணிகண்டருக்கும், பம்பையின் பாலனுக்கும், சபரிமலை சாஸ்தாவிற்கும் மங்களம், ஜெய மங்களம், மங்களம் நித்திய சுபமங்களம். ஜெய மங்களம், நித்திய சுபமங்களம்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
கன்னிமாரையும், ஐயன்மாரையும் கட்டிக்காத்தருளவேண்டும், என் குருநாதன் சபரிமலை வாழும் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா, சரணம் ஐயப்பா, சரணம் ஐயப்பா.
பொருள்
- அந்தகாரம்: இருள், அஞ்ஞானம், மும்மலம்
- சதமதன: 100 மதன்
- அடவி: காடு
- அரவு: பாம்பு
- அலகை: பேய்
- கனகாந்தகிரி: கனக + அந்த + கிரி (தங்கம் போல ஜொலிக்கும் மலை)
- மருங்குற: பக்கம் உள்ள
- துய்ய: தூய்மையான, சுத்தமான, மாசற்ற, நிர்மலமான
No comments:
Post a Comment